Share via:
வேலைக்கு லஞ்சம், ஹவாலா பரிவர்த்தனை என அமைச்சர் நேரு 1,020 கோடி
ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் தலைமைச் செயலருக்கும்,
டிஜிபிக்கும் அமலாக்கத்துறை ஒரு புதிய கடிதம் எழுதியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து அமைச்சர் நேரு பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறையில் வழங்கப்பட்ட 2,538 பணி நியமன ஆணைகளில் சிலருக்கு லஞ்சம்
வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்
துறை கடந்த அக்டோபர் 27-ம் தேதி கடிதம் எழுதியிருந்தது.
இந்த கடிதத்தை எழுதிய சில நாட்களுக்கு பிறகு இப்போது அமைச்சர்
நேரு மீது மற்றொரு குற்றச்சாட்டை வைத்து தலைமைச் செயலருக்கும், காவல்துறை டிஜிபிக்கும்
அமலாக்கத்துறை மற்றொரு கடிதத்தை எழுதியுள்ளது. அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட
டெண்டர்களுக்காக அமைச்சர் கே.என். நேரு தனது உறவினர்கள் மூலம் மொத்த ஒப்பந்த மதிப்பில்
7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியிருப்பதாக
இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் நேரு இந்த வகையில் 1,020 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவும்,
கட்சி நிதியாகவும் வாங்கியிருப்பதாக இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமலாக்கத் துறை,
இது தொடர்பான 252 பக்க ஆவணத்தையும் கடிதத்துடன் சமர்ப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பியுள்ள
252 பக்க ஆவணங்களில் அமைச்சர் நேரு லஞ்சம்
வாங்கியதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமான புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்டவை
அடங்கும். அமலாக்கத்துறை அளித்துள்ள தகவலின்படி, ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சத்
தொகை பெற்ற பிறகு, டெண்டர்களுக்கான ஏலம் திறக்கப்படும் தேதிக்கு முன்பே
அவை இறுதி செய்யப்பட்டுள்ளன.
சமுதாயக் கழிப்பறைகள் கட்டுதல், நபார்டு திட்டப் பணிகள், துப்புரவுப்
பணியாளர்களுக்கு குடியிருப்புகளைக் கட்டுவது,
கிராமங்களில் சாலை அமைப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களை விட இவ்வாறு லஞ்சம்
பெற்றுள்ளதாக அமலாக்கத்துறையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின்போது
இதுதொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் ஒரு துறையிலேயே, ஒரு அமைச்சரே 1,020 கோடி ரூபாயை ஒப்பந்தம்
வழங்குவதற்காக மட்டும் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்றால், ஒட்டுமொத்த துறைகளையும்
சேர்த்து இந்த விடியா திமுக அரசு எவ்வளவு கொள்ளை அடித்திருக்கும் என்று மக்கள் அதிர்ந்து
நிற்கிறார்கள்.
இந்நிலையில், அமைச்சர் நேரு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்..?
