Share via:
தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து உரையாற்றினார்.
இன்று (அக்.9) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதோடு பஞ்சாப் முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்து வந்த சபாநாயகம், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு, சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று (அக்.9) கூடியுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் நடப்பு ஆண்டிற்கான 2023& 2024 கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகின.
அதோடு சேர்த்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தமிழ்நாட்டு விவசாயிகளின் அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். பின்னர் அது குறித்து முதலமைச்சர் சபை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றி தீர்மானத்தை ஒரு மனதாக ஆதரிக்குமாறு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கேட்டுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது நிதி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.