Share via:

அமுதகரங்கள் என்ற திட்டத்தை மேயர் பிரியா முன்னிலையில் மு.க.ஸ்டாலினின்
மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதை பார்த்தவர்கள், ‘அவர் என்ன அமைச்சரா அல்லது
அரசு பதவியில் இருக்கிறாரா..? அவர் எப்படி திட்டத்தைத் தொடங்கிவைக்க முடியும்?’ என்று
கடுமையாக விமர்சனம் வைத்தார்கள்.
இது குறித்து அ.தி.மு.க.வினர், ‘’கடவுள் மறுப்புக் கொள்கை பற்றி
தி.மு.க.வினர் ஏதேனும் ஏடாகூடமாகப் பேசினால் உடனே அதை திசை திருப்புவதற்காக ஏதேனும்
கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் சென்று வருவதை மாற்றி மாற்றிக் காட்டுவார்கள். இந்த நிலையில்
நேரடியாகவே அரசு திட்டத்தைத் தொடக்கிவைத்துள்ளார். ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார்
என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதற்காக இப்படி மனைவியை வைத்து திட்டத்தைத் தொடங்கலாமா?’’
என்று கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் தி.மு.க.வினர், ‘’தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சியின் சார்பில் ’அமுதக் கரங்கள்’
என்னும் அன்னதான திட்டத்தை துர்கா ஸ்டாலின் நேற்றைய தினம் கொளத்தூரில் தொடங்கி வைத்தார்.
இது தமிழ்நாடு அரசின் திட்டம் கிடையாது. தி.மு.க.வின் கட்சியினருடைய திட்டம். ஆகவே,
அவர் தொடங்கியதில் எந்த தவறும் இல்லை. கட்சித் திட்டத்துக்கும் அரசு திட்டத்துக்கும்
வித்தியாசம தெரியாமல் இவர்கள் எப்படி அடுத்து ஆட்சியைப் பிடிப்பார்கள்?’’ என்று கிண்டல்
செய்கிறார்கள்.
அதுசரி, பள்ளி மாணவிகளை சீருடையில் கட்சி விழாவில் பங்களிக்கச்
செய்யலாமா, இது விதிமீறல் இல்லையா என்று அடுத்த பஞ்சாயத்தைத் தொடக்கியிருக்கிறார்கள்.