Share via:
தேர்தலில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி நாளை காங்கிரசில் இணைய உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தெலுங்கானாவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கிடையில் பா.ஜ.க. தனது 100 வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்ததால் அங்கு தேர்தல் களம் மற்றும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.
இந்த பரபரப்பு சூழ்நிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை விஜயசாந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதால் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக காரணத்தையும் முன்வைத்துள்ளார். மேலும் நாளை (நவ.17) காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகுவது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. கடந்த 1997ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயசாந்தி, 2005ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கியதால் விலகினார். அதன் பின்னர் சந்திரசேகரராவின் டி.ஆர்.எஸ். கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் ஆதரவில் 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று விஜயசாந்தி எம்.பி.யான நி லையில் 2014ம் ஆண்டு திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பின்னர் 6 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயசாந்தி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார். எப்படியும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைத்திருந்த விஜயசாந்தி ஏமாற்றமடைந்ததால் பா.ஜ.க.வில் இருந்து மீண்டும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.