Share via:
மலேசியாவில் பிரமாண்டமான இசை விழா நடத்திக் காட்டிய விஜய் அடுத்து
தைப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு நடந்துவரும் ஏற்பாடுகள்,
அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
சினிமா இசை வெளியீட்டு விழாவிற்கு வெளிநாட்டில் சுமார் 1 லட்சம்
ரசிகர்கள் கலந்துகொண்ட விஜய் நிகழ்ச்சி, ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனையாகப்
பதிவு செய்யபட்டு, இதற்கான சான்றிதழ் மேடையிலேயே விஜய்யிடம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யைக்
கட்டி அணைக்க வேண்டும் போல இருக்கிறது என்றதுமே ஓடிவந்து கட்டியணைத்தார் விஜய். அதேபோல்,
விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மேடையில் சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம்
ஏரியா என்ற பாடலை பாடி அசத்தினார்.
ஜனநாயகன் படம் பற்றி பேசிய எச். வினோத், ‘’ இந்த படம்
ஒரு ரீமேக். அது எப்படி இருக்குங்குற பயமும் சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கு. கொஞ்சம்
முன்ன பின்ன இருக்கே, நடுவுல புகுந்து அடிச்சிருமான்னு யோசிக்குறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.
ஐயா, இது தளபதி படம். உங்க மைண்ட்ல இருக்க எண்ணங்கள் எல்லாம் அழிச்சிட்டு, 100% சுவாரஸ்யமான
படத்தை பார்க்க போறோங்கிற மனநிலையில் வாங்க. நீங்க ஆடிப்பாடி கொண்டாடவும் மொமண்ட்ஸ்
இருக்கு. அமைதியா உட்கார்ந்து யோசிக்கவும் மொமண்ட்ஸ் இருக்கும்’’ என்றார்.
இறுதியாகப் பேசிய விஜய், ‘’இசையமைப்பாளர் அனிருத்துக்கு ‘MDS’
(Musical Departmental Store) எனப் புதிய செல்லப்பெயர் சூட்டினார் விஜய். அனிருத் ஒரு
மியூசிக் அங்காடி போன்றவர். அந்த ஸ்டோருக்குள் போனால் உங்களுக்குத் தேவையான எதை வேண்டுமானாலும்
எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வெளியே வரலாம். அவர் ஒருபோதும் என்னை ஏமாற்றியதே இல்லை.
எனது இயக்குனர் வினோத், தனது கமர்ஷியல் திரைப்படங்களின் வழியாகச்
சமூகக் கருத்துக்களைச் சொல்வதில் வல்லவர்” எனத் தெரிவித்தார்.
வில்லனாக நடித்துள்ள பாபி தியோல் ஸ்கிரீன் பிரசன்ஸ் வேற லெவலில்
இருக்கும். அவருடைய படங்களை பார்த்துத் தான் நாங்க ‘பிரியமுடன்’ மற்றும் ‘வில்லு’ படங்களுக்கு
இன்ஸ்பிரேஷன் பெற்றோம். அவரிடமே ‘உங்களுக்கே தெரியாமல் உங்க இரு படங்களை நாங்கள் சுட்டுவிட்டோம்
சார்’ என்று விளையாட்டாகச் சொன்னேன்” எனக் கூறி அரங்கைச் சிரிப்பலையில் நனையவைத்தார்.
மமிதா இன்று இளைஞர்களின் ‘டூட்’ (Dude) மட்டுமல்ல. இந்தப் படத்திற்குப்
பிறகு குடும்பங்கள் கொண்டாடும் மகளாக மாறுவார் என்றார். பூஜா தமிழ்
சினிமாவின் மோனிகா பெலூசி என பாராட்டினார். ஹீரோயினை விட எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும்
இடையிலான கெமிஸ்ட்ரி ‘கில்லி’ படத்திலிருந்தே மிகச்சிறப்பாக வேலை செய்கிறது.
நான் அறிமுகமான முதல் நாளில் இருந்து இதுவரை 33 வருடத்திற்கும்
மேல் என் கூடவே பயணித்த ரசிகர்களுக்கு உதவ, அடுத்த 33 வருஷத்துக்கு அவுங்களுக்கு உதவ
நான் இருக்கிறேன். எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்கு நான் சினிமாவை
விட்டுக் கொடுக்கிறேன்’’ என்றார்.
இந்த விழா அடுத்த வாரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட
உள்ளது. நேரில் பார்க்க முடியவில்லையே என்று வருந்தியவர்கள் பார்த்துப் பார்த்து திகட்டும்
வகையில் விழா இருக்கும் என்கிறார்கள்.
அதோடு, பொங்கல் விழாவை முன்னிட்டு ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியைப்
பார்வையிட விஜய் முடிவு செய்து இருக்கிறார். மதுரை ஏரியாவே அலைமோதும் என்று எதிர்பார்க்கலாம்.