Share via:
மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் கடுமையான பணிச்சூழலை தாங்கிக்கொள்ள
முடியாமல் தற்கொலை செய்வது தொடர்கதை ஆகிறது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும்
எடுக்காத நிலையில், இன்னொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவ அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர்
பெருமாள் பிள்ளை, ‘’விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த டாக்டர் அரவிந்த் (29) சென்னை மருத்துவக்
கல்லூரியில் MD முதுகலை பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திருவல்லிக்கேணி
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில்
தங்கி வந்தார்.
இவரும் டாக்டர் மாரிமுத்து என்ற மாணவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.
மாரிமுத்து வழக்கம்போல் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு விடுதியில் உள்ள தனது அறைக்கு
செவ்வாய்கிழமை இரவு வந்த போது, அறையின் கதவை பலமுறை தட்டியும் அரவிந்த் திறக்கவில்லை.
இரவு நேரமாகி விட்டதால் அரவிந்த் தூங்கி இருக்கலாம் என நினைத்து,
மாரிமுத்து எதிரில் உள்ள அறைக்கு சென்று தூங்கியுள்ளார். புதன்கிழமை காலை மீண்டும்
அறை கதவை மாரிமுத்து தட்டிய போது, அரவிந்த்
திறக்காததால் சந்தேகமடைந்த மாரிமுத்து, நண்பர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று
பார்த்த போது, அரவிந்த் படுக்கையில் இறந்து கிடந்தார்.
அரவிந்த் வலது கையில் கயிறு கட்டப்பட்டு, மற்றொரு முனை கட்டிலில்
கட்டப்பட்டிருந்தது. அதனருகில் ஊசி (சிரிஞ்ச்) ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் அரவிந்த்
விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துள்ளது மாணவர்களுக்கு தெரிய வந்தது.
திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அரவிந்த்
சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரவிந்த் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.
நம்மை பொறுத்தவரை, உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் IMA நடத்திய
ஆய்வின் போது, பெரும்பாலான இளம் மருத்துவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது
நினைவிருக்கலாம்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் இளம் மருத்துவர்கள் உயிரிழப்பு
அதிகமாக உள்ளது என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து கேள்வி
எழும் போதெல்லாம் அதை சமாளிக்கும் விதமாக தான் பதில் சொல்கிறாரே தவிர தீர்வுக்கான உறுதியான
நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
அதுவும் தற்போது சென்னையில் MMC, KMC, ICH, RIO மற்றும் பல்வேறு
மாவட்டங்களிலும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு போதிய உறைவிட வசதி (Quarters) இல்லாமல்
அவதிப்படுகின்றனர். ஏற்கனவே உதவித்தொகை (Stipend) குறைவாக தரப்படும் நிலையில், வெளியே
தங்க வேண்டிய நிலையில் இருப்பதால் சிரமமாக உள்ளதோடு, செலவும் அதிகமாகிறது.
எனவே முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு
அரசு உடனடியாக உறைவிட வசதி செய்து தருவதோடு,
அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில்
கவுன்சிலிங் தரப்பட வேண்டும். ஆரோக்கியமான பணி சூழலை ஏற்படுத்த வேண்டும்…’’
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்னும் எத்தனை பயிற்சி மருத்துவர்கள் உயிரை காவு வாங்கப் போகிறது
அரசு..?

