Share via:
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் கருட சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்ய சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது சென்னையில் இருந்து புறப்படும் குடைகள் கருட சேவையின் போது திருப்பதியை அடைவது வழக்கம். அதன்படி கடந்த 16ம் தேதி சென்னையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற குடைகள் நேற்று (செப்.21) இந்து திருமண சமதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கே.பாலாஜி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான கருட சேவையும் அதைத் தொடர்ந்து தங்கத் தேரும், 25ம் தேதி திருத்தேரும், 26ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும். அதைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் திருமலை திருப்பதி விழாக்கோலம் பூண்டு பக்தர்களின் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது. அதன்படி நடைபெற்ற இன்றைய பிரம்மோற்சவ வழிபாட்டின் அரிய புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பக்கத்தில் காணலாம்.

