Share via:
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை வெடித்தது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி சென்னை பழைய டி.பி.ஐ. வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையையும் பாராமல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையில் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தொடக்க கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அது தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்று 7வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கருத்தில் பிடிவாதமாக உள்ளனர். அதில் ஒரு இடைநிலை ஆசிரியர் கூறும்போது, ‘‘எங்களுக்கு குழந்தைகளுக்கு மட்டும் உணவு வழங்கிவிட்டு நாங்கள் பட்டினி கிடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.