Share via:
கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட
காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள்.
இப்போது 18 வயதை கூட ஆகாத டிபன் பாக்ஸ் ஹேர் கட்டிங் புள்ளீங்கோ
எல்லாம் பைக்கில் ட்ரிபிள்ஸ் செல்கின்றன. ஹெல்மெட் போடுவதில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும்படி
அதீத ஹாரன் ஒலி எழுப்பி வேகமாக வண்டி ஓட்டுகின்றன. இந்த மைனர் குஞ்சுகள்தான் கும்பலாக
சேர்ந்து ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அரிவாள்களை தூக்கி வெட்டும் அளவுக்கு
வளர்ந்து விட்டனர்.
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் வடமாநில தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து
ரீல்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு இளைஞரை 4 மாணவர்கள் கொடூரமான முறையில்
தாக்கிய வீடியோ தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அதேபோன்று மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்கள் 6 பேர்
சேர்ந்து பொழுதுபோக்குக்காக கேபிள் ஒயரால் தூங்கிக்கொண்டிருந்த தெரு நாய்களின் கழுத்தை
நெரித்து கொடூரமாக கொலை செய்த செய்தி இன்று நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில்
ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் 6 முதல் 9-ம் வகுப்புவரை படிப்பவர்கள் என்பது அதிர்ச்சியை
மேலும் அதிகரிக்கிறது.
இதே வழியில் சென்னை கேளம்பாக்கம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட
21 வயது பெண்ணை 2 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது.
தனக்கு என்ன நடந்தது என்பதைக் சொல்லக்கூட முடியாத அந்த பெண் இப்போது 3 மாதம் கர்ப்பமாக
இருக்கிறது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக
இருப்பதால், அதற்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து
வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் குற்றச் செயல்களைப் பற்றி தொலைக்காட்சிகள் மற்றும்
செய்தித் தாள்களில் படிப்பதால், பள்ளி மாணவர்களுக்கும் வன்முறையில் ஈடுபடுவதில் ஆர்வம்
ஏற்படுகிறது.
போலீஸாரால் மற்ற குற்றவாளிகளை பிடிக்க முடியாததுபோல், தங்களையும்
ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் சிறுவர்கள் மனதில் வேரூன்றி விட்டதையே இந்த
சம்பவங்கள் காட்டுகின்றன. குற்றம் செய்ய பயப்படாத, இளம் தலைமுறை உருவாகிவிட்டது. பையன்களுக்கு இணையாக பெண் பிள்ளைகளும் அறைகுறை ஆடையுடன்
ஆட்டம் போடுவது, தம் அடிப்பது, சரக்கு அடிப்பதையும் ரீல்ஸ் ஆக்கிவருகிறார்கள்.
எனவே உடனடியாக பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான சீர்திருத்தங்கள்
செய்யப்படவேண்டும். ஆசிரியரிடம் அடிவாங்காத பையன் ஒருநாள் போலீஸ் கிட்ட அடிவாங்குவான்.