Share via:
தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்ட அறிவிப்பால் போக்குவரத்து சேவை முடங்கும் அபாயத்தால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த கொரோனா காலமான 2020ம் ஆண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சி.ஐ.டி.யு.சி. சார்பில், மத்திய அரசின் போனஸ் சட்டதிருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச கூலியை கணக்கிட்டு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று கடிதம் வழங்கப்பட்டது. இக்கோரிக்கையை முன்னிட்டு வருகிற 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய 3 நாட்கள் 12 மணிநேரம் காத்திருப்பு போராட்டத்தை பல்லவன் சாலையில் அமைந்துள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக நடத்தப்படுவதாக கூட்டமைப்பு தொழிற்சங்கள் முடிவு செய்துள்ளன.
இதனால் வருகிற 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய 3 நாட்களுக்கு போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.