Share via:
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை மேற்கொள்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் அரசியல் களத்தில் சாதுர்யமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில்தான் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (அக்.5) டெல்லி செல் உள்ளதாகவும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் நேற்று (அக்.4) தகவல்கள் கசியத் தொடங்கின.
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் இணைய உள்ளதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இச்செய்தி அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்றும் இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்ட முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், யாருடன் கூட்டணி, பா.ஜ.க.வின் அழைப்பு என பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.