Share via:
சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் 80 வயதான சுந்தரம். இவர் செவிதிறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 18ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முதியவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்தவர்களிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாக சென்னை மடிப்பாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை 2 மாடுகள் சுற்றிவளைத்து தாக்கியது. இதைத்தொடர்ந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்யவும், அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி மேயர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.