Share via:
கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று கடைசிநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
காலை 9.45 மணியளவில் தொடங்கிய இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, எடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2,300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த அரங்கின் மையப்பகுதியில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் மொத்த அரங்கமே அதிர்ச்சிக்குள்ளாகி குலுங்கியது.
இதனால் அதிர்ந்து போன பெண்கள், குழந்தைகள் என மொத்த மக்களும் அங்கும் இங்குமாக அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு திணறிக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்ததால் 2 இடங்களில் தீப்பிடித்து எரிந்தது.
குண்டு வெடிப்பு காயம், தீக்காயம் என பல படுகாயமடைந்த நிலையில் பலரின் ஆடையில் தீப்பற்றி எரிந்தது. அதனை அணைக்க மக்கள் தரையில் படுத்து உருண்டார்கள். ஆனால் ஒரு சிலர் தீயை அணைக்க முடியாமல் திணறியபோது அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அவர்களை மீட்க போராடினார்கள்.
இப்படி சில நிமிடங்களில் போர்க்களமான அந்த பகுதியில் இருந்து மக்கள் மரண ஓலம் எழுப்பினார்கள். இந்த விபத்தில் லிபினா என்ற பெண் சம்பவ இடத்திலேயே தீயில் உடல் கருகி பலியானார்கள். மேலும் 51 பேர் படுகாயமடைந்தனர். அதைத்தொடர்ந்து குமாரி என்ற 55 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து 95 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சமும் நிலவுகிறது.