Share via:
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித உத்தரவாதமும் அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பியது. அந்த கோரிக்கைக்கு தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரையை அனுப்பி வைத்ததுடன் தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், ஆளுநரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் 20 இஸ்லாமியர் உள்பட 49 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.