Share via:
கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தோள் மீது கை போட்டு இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (அக்.27) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுரேஷ்கோபியிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அந்த பெண் பத்திரிகையாளரின் தோளை பிடித்து இழுத்தார்.
அவர் பிடியில் இருந்து விலகிய பெண் பத்திரிகையாளர் தூரமாக செல்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த பெண் பத்திரிகையாளரின் தோளை பிடித்த போது, அதை பெண் பத்திரிகையாளரும் நாசூக்காக தவிர்க்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சுரேஷ்கோபிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இதன் விளைவாக கேரள பத்திரிகையாளர் சங்கம், முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யான சுரேஷ் கோபி மீது போலீசில் புகார் அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து சுரேஷ்கோபி கூறும்போது, ‘‘அந்த பெண் பத்திரிகையாளர் என் வழியை பலமுறை மறைத்தார். அதன் காரணமாக அவரை நான் நகர்த்த முயன்றேன். நான் ஒரு தந்தையைப் போல அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்க பல முறை தொடர்பு கொண்டேன்’’ என்று கூறினார்.
இதை பார்த்த நெட்டீசன்கள், செய்வதை எல்லாம் செய்துவிட்டு தந்தையை போல என்று சுரேஷ்கோபி அந்தர் பல்டி அடித்துவிட்டார் என்று கிண்டலடித்து வருகின்றனர். பெண் பத்திரிகையாளரை சீண்டும் வகையில் சுரேஷ்கோபி நடந்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.