Share via:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன்&2, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மொத்த வசூலையும் முறியடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு 171வது படம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் அதற்கடுத்தபடியாக ரஜினிகாந்தின் 171வது படத்திற்காக பணியாற்ற உள்ளார். இது குறித்த போஸ்டர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

