Share via:
புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் புதிய மருத்துவமனைகள் மற்றும் முதலீடுகள் இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதுதொடர்பாக மாநில அரசுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும். அதைவிடுத்து தன்னிச்சையாக முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.