Share via:
தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வர தாமதமானதால், கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்டோர் நீண்ட நேரமாக மேடையிலேயே அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வெகுநேரமாக வராத காரணத்தால் அவர் வருவதற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு கூட்டம் தொடங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கேசவ விநாயகம், ‘‘பா.ஜ.க. தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களை டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது’’ என்று பேசினார்.
அதைத்தொடர்ந்து கூட்டத்திற்கு வந்து சேர்ந்த அண்ணாமலை, அனைவர் மத்தியிலும் உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘அடுத்த 7 மாதங்களுக்கு தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவே ஓய்வு என்பதே கிடையாது. பூத் கமிட்டிகளில் பெண்களை அதிகளவு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வாக்குகளை சேகரிக்க பெண்கள் சென்றால், வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும் வாரம்தோறும் கிளைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் உத்தரவிட்ட அவர், பா.ஜ.க. கூட்டணியைவிட்டு செல்பவர்கள் செல்லட்டும். அது அவரவர் விருப்பம் என்பதால் அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தேர்தல் கூட்டணி குறித்து டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும். என்னுடைய கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன் என்று தெரிவித்தார்.
தான் நடத்தி வரும், ‘என் மண் என் மக்கள்’ நடை பயண நிறைவுநாளில் சென்னையில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துக் கொண்டார். அக்கூட்டத்தில் மொத்தம் 10 லட்சம் தொண்டர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் உயர்மட்ட குழுக்கூட்டம் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.