Share via:
ஓ.பன்னீர்செல்வம் என்றுமே என் ஆதரவாளர்தான் என்று சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது அ.தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்றும் உண்மையான அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்று என்று சூளுரைத்துக் கொண்டிருப்பவர்தான் சசிகலா. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்ற போதிலும் அவருக்கு பல்வேறு சமயங்களில் ஆலோசனைகளையும் கூறி வந்தார் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா அறிவித்து, அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கைமாறியது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து அதிர்ச்சியை அளித்தார்.
இந்தநேரத்தில்தான் சிறையில் இருந்த சசிகலா வெளியே வந்தார். இந்த அனைத்தும் ஒரே புள்ளியில் இணைந்த போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் இடையிலான நட்பு மீண்டும் துளிர்த்தது. அதை அங்கீகரிக்கும் வகையில் தற்போது சசிகலா சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசும் போது, ‘‘எனக்கு பயமே கிடையாது. நான் மக்களை மட்டும்தான் பார்ப்பேன். நாங்கள் தி.மு.க. மாதிரி கிடையாது. அ.தி.மு.க.வாக இருந்தாலும் தப்புன்னா தப்பு என்றுதான் சொல்லுவேன். எங்களுக்கென்று ஒரு வழி உள்ளது. எங்கள் இரண்டு தலைவர்கள் சொல்லி கொடுத்த வழி என்று எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் நினைவுகூர்ந்து பேசினார்.
நிச்சயமாக இந்த இயக்கம் நன்றாக வரும் என்று கூறிய சசிகலா, ஆனால் அ.தி.மு.க.வில் எப்போதுமே ஒரு சின்ன பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஒரு தலைவர் மறைந்த பின்னர் ஒரு பிரச்சினை வரும். அந்த பிரச்சினை அப்படியே நீடிக்காது. திருப்பி சேர்ந்துவிடுவோம். இது 2வது மறையாக நடந்துள்ளதால் மறுபடியும் நாங்கள் இணைவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இப்போது எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து என்னால் இந்த பிரச்சினையை எளிதாக சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறிய சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர்தான். அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். என்னால் அனைவரையும் சரி செய்ய முடியும். அந்த கெப்பாசிட்டி எனக்கு இருக்கிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அதே போல் எந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது மற்றவர்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் என்று பேசியது அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.