News

Follow Us

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும், கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுக்கு இணங்க, காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து விரட்டிப்பிடித்து கைது செய்து வருகிறார்கள். 

சமீபத்தில் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 63 நபர்களை கைது செய்து 1,788 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி அதிரடி காட்டியது. 

இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ரோகித் நாதன் ராஜகோபால் தலைமையில் அமைந்தகரை உதவி ஆய்வாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, கே3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் பி.கிருபாநிதி, உதவி ஆய்வாளர்கள் இ.ராஜ்பிரபு, ஜி.தசரதன், முதல்நிலைக் காவலர்கள் ஜான் இளங்கோ, எஸ்.மாரிசாமி, எம்.ராம்சங்கர், காவலர்கள் ஜி.மகேஷ், எம்.ராஜபாண்டி, நந்தகுமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் கடந்த 20ம் தேதி ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு வெளிநாட்டுக்காரர் ரகசியமாக கொக்கைன் போதைப் பொருள் விற்பனை செய்வதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து போதைப்பொருளை பதுக்கிவைத்து விற்பனை செய்துகொண்டிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜாகு சினேடு ஒனாச்சி என்பவரை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர். 

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது மனைவி எஸ்மெல்சியா மிகாஷ் என்ற லியோனி மற்றும் அமே சீயான் இனலெக்வு ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1 கிலோ கொக்கைன் போதைப் பொருள், 6 செல்போன் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டது.

நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்த அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் ஆர்.ரோகித் நாதன் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link