Share via:
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி
கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் அண்ணாமலை தொடங்கி இருந்து ஆளும் கட்சியின் கூட்டணிக்
கட்சிகளான கம்யூனிஸ்ட், வேல்முருகன் வரையிலும் எதிர்ப்பு தெரிவித்துல்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி.
முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில்
தொடர்ந்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் கடந்த 10-ம் தேதி, புதுக்கோட்டை
கோட்டாட்சியரிடம் சிலக் குவாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் பலநூறுக் கோடிக்கான
கனிமவளக் கொள்ளை நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த
ஜெகபர் அலி மீது திட்டமிட்டு லாரி மோதி கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இறந்த விவகாரத்தில்
4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு
கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’கனிமவள கொள்ளைக்கு எதிராக குரல்
கொடுத்து வந்த அ.தி.மு.க. பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி லாரி ஏற்றி கொலை
செய்யப்பட்டு இருக்கிறார். இந்த ஆட்சியில் தான் கனிமவள கொள்ளை, மணல் கடத்தல் உள்ளிட்ட
சட்டவிரோத செயல்களை தடுக்கும் நபர்களை எல்லாம் கொலை செய்வது அதிகரித்துள்ளது. மணல்
கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், இதே ஆட்சியில் 2023ல் படுகொலை
செய்யப்பட்டிருந்தார்.
கனிமவள மற்றும் மணல் கொள்ளைகளை கேள்வி கேட்டாலே அது உயிருக்கு
ஆபத்தை விளைவிக்கும் என்று இந்த ஆட்சியில் சர்வசாதாரணமாக சிலர் கொலைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
திருமயம் வட்டாட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கனிமவள கொள்ளை குறித்து புகார் கொடுத்து
15 நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது ஜெகபர் அலி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்களின் ஆதரவு இன்றி, இத்தகைய செயலை துணிச்சலாக
ஒருவரால் செய்ய முடியாது. ஆனால் விசாரணையில் நிச்சயம் இதற்கு பின்னால் உள்ள அதிகார
பலம் யார் என்று இறுதிவரை தெரிவிக்கப்படாது. இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால்
மட்டும் தான், பொதுமக்களின் பாதுகாப்பையும், இதுபோன்ற சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பையும்
உறுதி செய்ய முடியும்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் தி.வேல்முருகன், ‘’சமூக ஆர்வலர் ஜெபகர் அலி சமூக விரோதிகளால்
லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும்
மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும்,
மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப்
சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான
குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும்
கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு. கனிமவளக் கொள்ளையர்கள்
மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான
முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி
வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை
எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை
நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கனிம வளங்களை தடுக்க நினைக்கும் சமூக ஆர்வலர்கள்
மீது தொடர்ந்து நடக்கும் படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் கொலை முயற்சிகள் என ஒரு
பட்டியல் சமூகவலைதளத்தில் அதிர்ச்சி தருகிறது.
10-09-2022 அன்று சட்ட விரோத மணல் குவாரியை புகார் கொடுத்து மூடியதற்காக,
விவசாயி கரூர் குப்பம் ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை.
2022-ல் ஆதாரங்களுடன் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியதற்காக,
ஈரோடு மாவட்டம், சென்னிமலை தமிழ்ச்செல்வன் மீது கூலிப்படை வைத்து கொலைவெறி தாக்குதல்!
2022-ல், நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், தொடர்ந்து சட்ட
விரோத கல் குவாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் மணி டிப்பர் லாரி
ஏற்றி படுகொலை!. விபத்து என மூடி மறைப்பு!
கடந்த ஆண்டு சட்ட விரோத கல்குவாரியை மூடியதற்காக, 12-05-2024 அன்று
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், விவசாயி வெண்கல பாளையம் நடராஜன் மீது வாகனம்
ஏற்றி கொல்ல முயற்சி!!
சென்ற மாதம் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கச்சைகட்டி சமூக
செயல்பாட்டாளர் ஞானசேகரன் மீது கல்குவாரி அடியாட்கள் கொலை வெறித் தாக்குதல.
இந்த விஷயத்தில் கனிமவளக் கொள்ளையர்களுக்கு ரகசிய தகவல் கொடுத்த
வட்டாட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரையும் பதவி நீக்கம்
செய்ய வேண்டும், கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. என்ன
செய்யப்போகிறார் ஸ்டாலின்?