Share via:
சந்திரமுகி-2 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆஸ்தான குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நாளை மறுநாள் (செப்.28) சந்திரமுகி-2 வெளியாக உள்ளது. பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது பி.வாசுவின் 65வது படமாகும். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் இமாலய சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரமுகி 2ம் பாகத்திலும் ரஜினிகாந்த் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது.
இந்நிலையில்தான் நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் சந்திரமுகி2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்திரைப்படம் நாளை மறுநாள் (செப்.28) தமிழ், தெலுங்கு, மலையாளம, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்னர் படத்தின் டிரெய்லர்கள் வெளியாகி மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த ஆசிர்வாதத்தை பெற்றார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

