Share via:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்.13) முதல் விரைவு ரெயில்களின் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது. டிக்கெட்டுகளை விரைந்து பெற பயணிகள் தற்போது முதலே தயாராகி வருகின்றனர்.
கல்விக்காகவும், பணிக்காகவும் சொந்த ஊரைவிட்டு செல்லும் பொதுமக்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிவிடும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப் பண்டிகை, அடுத்த நாள் (ஜனவரி 15) பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் உள்ளிட்டவை கொண்டாட உள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணத்தை எளிதாக்கவும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயணிகள் தங்கள் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆயத்தமாகி இருக்கிறார்கள்.