Share via:
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் அவசியம் குறித்தும் கட்சிகள், அமைப்புகள் என பலரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் விரைவில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கடந்த 19ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க. அரசு இரட்டை நிலைபாட்டையே எடுத்து வருகிறது என்று குற்றம்சாட்டி பேசினார். மேலும் தேசிய அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேசிய அரங்குகளில் வலியுறுத்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர மறுக்கிறது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.