Share via:
ஆசியக் கோப்பை சூப்ப்ர4 போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய சாதனை புரிந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். அதிலும் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிகளைப் பற்றி சொல்லவா வேண்டும். எப்போது போட்டி தொடங்கும் என்றும் டிவி முன்பு குடும்பம் குடும்பமாக காத்துக் கொண்டிருக்கும் வழக்கம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளையும் (50) ரசிகர்கள் ஆர்வமாக கவனித்து வருகிறார்கள். கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்த போது மழை வந்து குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் ராகுல் 17 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று ரிசர்வ் நாளிலும் மழை காரணமாக ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடங்கியது. போட்டியின் 45வது ஓவரில் 300 ரன்களை இந்தியா எட்டியது. அப்போது விராத் கோலி தனது 47வது சதத்தை எடுத்து ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். மேலும் ஒருநாள் விளையாட்டு போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி தனக்கு சொந்தமாக்கினார்.
அதன்படி இந்திய அணி மொத்தத்தில் 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்களை குவித்தது. விராட் கோலி 122 ரன்களுடனும், ராகுல் 111 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தானுக்கு கடின இலக்கை எட்ட வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான பகர் ஜமான், இமாம் உல்ஹக் ஜோடியின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்தில் இமாம் ஆட்டம் இழக்க தொடர்ந்து 2 விக்கெட்டுகள் 44 ரன்களுக்கு சுருண்டது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தியது.
அதன் பின்னர் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி தொடங்கிய போது, இந்திய பந்து வீச்சாளர் குல்தீப்பின் பந்துக்கு, பகர் ஜமான், சல்மான், இப்திகார், ஷதாப் கான் என வரிசையாக பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. மேலும் பாகிஸ்தான் வீரர்களான நசீம் ஷா, ஹாரிஸ் ராப் ஆகியோர் காயம் காரணமாக களம் இறங்கவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் படுமோசமாக தோல்வியடைந்தது.
மொத்தத்தில் இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியே தீரும் என்று நம்பிக்கையில் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து ஆரவாரம் செய்தனர்.

