Share via:
அ.தி.மு.க.வின் 52வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைமை அலுவலகத்திற்கு நுழைந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு, சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். இந்த கொண்டாட்டங்களின் போது அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் 52வது ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தொண்டர்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி கோவையில் கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த பின்னர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்பது கோவை மக்களின் எண்ணம். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.