Share via:
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியினர் பின் வாங்கி இருப்பது கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் இணைவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சமயத்தில் தான் ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதிஒ ரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சியில் சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த இவர் தொடர்ந்து 2 முறை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சி செய்து வருகிறார். இம்முறையில் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றால் தனது ஹாட்ரிக் சாதனையை படைப்பார் என்று பி.ஆர்.எஸ். கட்சியினர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி, பி.ஆர்.எஸ். கட்சிக்கு கடும் சவாலாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மாநில தலைவர் கசானி ஞானேஸ்வர் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்தித்து பேசிய அவர், தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் இருந்து விலகி இருக்க தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.