Share via:
இன்று நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. அண்ணாமலை தொடங்க இருக்கும் புதிய கட்சியில் ரஜினியின் மருமகன் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ரஜினியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன், ‘’இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான மேனன் அரவிந்த்அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அப்போது, மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்…’’ என்று மட்டும் கூறியிருந்தார்.
அண்ணாமலையின் தனிக்கட்சிக்கு ரஜினி ஆதரவு போய்விடக் கூடாது என்பதற்காகவே சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையின் “வி தி லீடர்ஸ்” இயக்கத்தில் ஆன்லைன் வழியாக சுமார் 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
அண்ணாமலை இயக்கத்தில் ரஜினி ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். ரஜினியின் ஆசிர்வாதத்துடன் இந்த இயக்கத்தில் இணைவதாக ராகவா லாரன்ஸ் பேசியிருந்தார். ரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் இந்த இயக்கத்தில் முக்கியப் பதவி வகிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆகவே, அண்ணாமலை ஆதரவுக்கு தடை போடுவதற்கே இந்த சந்திப்பு என்று சொல்லப்படுகிறது.
டெல்லி உத்தரவுக்கு ரஜினி கட்டுப்படுவாரா..?