Share via:
நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு இவ்விழா செப்.30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூதாமஸ் என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்து முடித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகளவில் லியோ வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா செப்டம்பர் _மாதம் 30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. டிக்கெட்டுகள் விநியோகம் குறித்து கூட பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த இசைவெளியீட்டு விழா ஒட்டுமொத்த தமிழகத்தின் பேச்சுப் பொருளாக இருந்தது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்தப்போவது இல்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல’’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனம் என்ன காரணம் சொன்னாலும், ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாகவே இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதாவது லியோ திரைப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட மற்றும் தென் ஆற்காடு பகுதிகளின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு வழங்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்படி உரிமை வழங்கினால் மட்டுமே நேரு உள் விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் ஆளுங்கட்சி சார்பில் லியோ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட குளறுபடிகள் எதிரொலியாக இருக்குமோ என்று கூட சில ரசிகர்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.