Share via:

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு
பலி கொடுக்க முற்பட்ட சம்பவம் இப்போது படு சர்ச்சையாக மாறிவருகிறது. சிக்கந்தர் தர்கா
தூண்கள் எல்லாமே இந்துக்களின் கோயில் தூண்களைப் போலவே இருக்கிறது, எனவே இதை கையகப்படுத்த
வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறார்கள். இந்த விவகாரத்தில் அண்ணாமலையும் நவாஸ்கனி
எம்.பி.யும் மோதிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் அங்கு மதக்கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு
இருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘’ஆன்மீக பூமியான தமிழகத்தில்,
அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன.
அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்
படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள்
விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.
குறிப்பாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனி, இரு
தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும்
தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும். திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள்
முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக
நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது.
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும்
வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே
தொடர வேண்டும் என்று, அனைத்து சமூக மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு
மாமிச உணவு சாப்பிடும் புகைப்படம் இன்று காலையில் இருந்து வைரல் ஆகி வருகிறது. இந்த
புகைப்படத்தை வெளியிட்டதே இராமநாதபுரம் எம்பி “நவாஸ்கனி” தான். அனைவரும்
சமம், அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் பணி செய்வேன் என்று பதவியேற்ற ஒரு MP இப்படி
செய்யலாமா? வேண்டுமென்று இப்படி செய்வதன் நோக்கம் என்ன? மதுரையில் மதக்கலவரம் வர வேண்டும்
என்று தூண்டி விடுகிறாரா? மதுரையில் மதக்கலவரம் வந்ததால் தான் திருப்பரங்குன்றம் மலையை
இஸ்லாமியர்கள் சொத்தாக மாற்ற முடியும் என்று நினைத்து வெளியிட்டு இருக்கிறாரா?’’ என்று
கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்திருக்கும் நவாஸ்கனி எம்.பி, ‘’மதுரை மற்றும் மதுரை
சுற்றுவட்டார அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும் நூற்றாண்டு காலமாக பழமை மிக்க சிக்கந்தர்
தர்கா மலை மீது அமைந்துள்ளது, அங்கு ஆண்டாண்டு காலமாக ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு
உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று. தற்போது ஏதோ புதிதாக அசைவ உணவு கொண்டு சென்று
உண்ணுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அங்கு ஆடு, கோழிகள்
நேர்ச்சை செய்யப்பட்டது, உணவுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இது நூறாண்டுகளுக்கும்
மேலாக தொடரும் நடைமுறை. காசி விஸ்வநாதர் ஆலயம் அங்கு அமைந்துள்ளது அதற்கு தனி பாதை
உள்ளது, சிக்கந்தர் தர்காவிற்கு தனி பாதை உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து
மத மக்களும் அங்கு நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் இணைந்து சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது தான் திடீரென இது போன்ற சர்ச்சைகள் கிளம்பி இருக்கின்றன.
இத்தனை ஆண்டு காலம் இது குறித்த எந்த பிரச்சனையும் வராத நிலையில்,
தற்போது இதன் மூலம் அரசியல் ஆதாயம் கண்டிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அரசியல்
ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட மூல அறிக்கையின்படி தர்கா
அமைந்துள்ள 50 சென்ட் நிலம் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த பகுதியில்
தான் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் வழிபாடு செய்வதும், இந்துக்கள் வழிபாடு
செய்வதும் எந்தவித இடர்பாடுகளும் சர்ச்சைகளும் இன்றி காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது.
ஆண்டாண்டு காலமாக நாம் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்போம். பிரிவினைவாத
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காலம் காலமாக எப்படி அங்கு நல்லிணக்கத்தோடு வழிபாடுகள்
நடத்தப்பட்டதோ அந்த நடைமுறை தொடர முயற்சிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.
உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு ஸ்டாலின்
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதக்கலவரத்தை தடுக்க முடியாது.