News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எப்போதும் போல் ஏற்றப்பட்டுள்ளது. அதேநேரம், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தீபத்தூணில் தான் விளக்கேற்ற வேண்டும் என்று துடித்த இந்து முன்னணியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற அவமதிப்புக்கு அஞ்சாமல் 144 தடையுத்தரவு போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த திமுக அரசுக்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைக்கும் நிலையில், பாஜகவினர் ஆட்சியைக் கலைக்க குரல் கொடுத்துவருகிறார்கள்.

இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன், ‘’திமுகவின் கொடூர ஆட்சி, மீண்டும் ஒரு முறை இந்துக்களின் முதுகில் குத்தியுள்ளது. பாசிச திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை மீறி காவல் துறையை ஏவி திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் இந்து சமுதாய மக்களை தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையை மோசடி திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தகர்த்தெறிந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் சட்டத்தை படுகொலை செய்துள்ளது.

உயர் நீதிமன்றம் இரண்டாவது முறை உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி, இந்துக்களின் நம்பிக்கை மீதும் சனாதன தர்மத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. நாசக்கார திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்…’’ என்று பொங்கியுள்ளார்.

இதற்கு திமுகவினர், ‘’ஐயப்பன் கோயிலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதா, அதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதை நிறைவேற்றக் கூடாது என்று பெரும் போராட்டங்களை நடத்தியது பாஜக. அதையொட்டி, “நிறைவேற்ற முடியாத தீர்ப்புகளை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்” என்றார் இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று கலவரம் செய்தன சங்கி கும்பல்கள். அப்படியே மதுரைக்கு வந்தால், காலம் காலமாக திருப்பரங்குன்றம் மலையில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உடையோர் என அனைத்து தரப்பும் அதை வழிபடுகிறார்கள்.

திடீரென ஒரு சங்கி, அந்த நம்பிக்கைக்கு எதிராக, தன் விருப்பப்படி மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு போடுகிறார். நீதிபதியும் அதை ஏற்று உத்தரவு போடுகிறார். காலம் காலமாக அங்கே நிலவும் வழிபாட்டு முறைக்கு, தீபம் ஏற்றும் மரபுக்கு, பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக, வழக்கமான இடத்திற்கு மாற்றாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவு போடுகிறார் நீதிபதி.

பெரும்பான்மை முருக பக்தர்களின் நம்பிக்கை அடிப்படையில், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிறது ஆலய நிர்வாகம். அரோகரா முழக்கம் எழ வேண்டிய இடத்தில், பாரத் மாதாக்கீ ஜே என்று முழக்கம் எழுப்புகிறார்கள் காவிக் கும்பல். காவல்துறையை தாக்கி வன்முறையில் இறங்குகிறது சங்கிக் கூட்டம். அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் கலவர திட்டத்தை முறியடிக்கிறது தமிழ்நாடு காவல்துறை. குஜராத்தில், உத்திரபிரதேசத்தில் நிகழ்த்தியதை தமிழ்நாட்டில் நடத்தப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – காவி கும்பலுக்கும் திமுக மணி கட்டியிருக்கிறது.

இப்போதைய சூழலில் அதிமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், பாமக, நாதக, தவெக என எந்தக் கட்சியாக இருந்தாலும் சரியான நிலைப்பாடு என்னவெனில், தமிழ்நாட்டை மதவெறியிலிருந்து காப்பாற்ற அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான்’’ என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link