Share via:
உலகளவில் வசூல் சாதனை புரிந்து வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது மலேசியாவில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மலேசியாவில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அடுத்த மைல் கல் என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ஓடிடி யில் வெளியான பின்னரும் இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு கார்களை பரிசாக வழங்கி கவுரவித்தார். மேலும் படக்குழுவை சேர்ந்த 300 பேருக்கு தங்க நாணயங்களை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்தநிலையில் மலேசியாவில் வரலாற்று சாதனை ஜெயிலர் திரைப்படம் படைத்துள்ளதாக மலேசியாவில் ஜெயிலர் படத்தை வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், இதுவரை மலேசியாவில் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

