Share via:
உச்சத்தை எட்டியுள்ள இஸ்ரேல் -ஹமாஸ் போர் எதிரொலியாக காஸாவின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம், காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் உருகுலைந்து போயுள்ள காஸாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் என்பதுதான் சர்வதேச நாடுகளை உலுக்கியுள்ளது.
மேலும் ஐ.நா. கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தை புறக்கணித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை துடைத்தெறிவதே நோக்கம் என்றும், போர் நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம் என்றும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழி தாக்குதலில் காசாவில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாகவும், அவற்றை மீட்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீனத்தில் இருந்து வரும் தகவல்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பார்க்கும் போது பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
காசாவில் இருந்த மொத்தம் 23 லட்சம் மக்களில் 8 லட்சம் பேர் தெற்கு பகுதிக்கு சென்ற நிலையில், மீதமுள்ளோர் வடக்கு காஸாவிலேயே தங்கிவிட்டனர். இதில் பலர் வீடுகளில் இருந்து வெளியேறி ஐ.நா. அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

