Share via:
தி.மு.க. கூட்டணியில் அசைக்க முடியாத கட்சியாக இருக்கும் விடுதலை
சிறுத்தைகள் கட்சி மீண்டும் சர்ச்சையில் மாட்டியிருக்கிறது. ’’நான்கு ஆண்டுகளுக்கு
முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுக்கால
அரசியல் அனுபவம்கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லையே!”
என்று வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது தி.மு.க.வை கண்
சிவக்க வைத்திருக்கிறது. அதேநேரம், வி.சி.க.வை இரண்டாக உடைப்பதற்காகவே இந்த வேலையை
ஆதவ் செய்கிறார் என்று சிறுத்தைகள் கட்சியினரே குற்றம் சாட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் பேசிவரும் ஆதவ் அர்ஜுன்,
‘’வட தமிழகத்தில் விசிக துணையில்லாமல் தி.மு.க.வை யாரும் வெல்ல முடியாது. வரும்
2026 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது’ என்றும் பேசியிருக்கிறார். இந்த
பேச்சுக்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
’’தமிழ்நாட்டில் தேர்தல் வியூக வகுப்பாளர் என்று சொல்லிக் கொள்ளும்
சிலர் தங்களை பிரசாந்த் கிஷோர் என்று நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு பேசி வருகிறார்கள்.
கூட்டணி என்பது Mutual respect and Mutual benefit சம்பந்தப்பட்டது. 2026ல் யாருக்கும்
பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்வதெல்லாம் கூட்டணி தர்மத்திற்கு மட்டும் எதிரானதல்ல.
தாங்கள் இருக்கும் கூட்டணியின் பலத்தையும் தன் சொந்தக் கட்சியின் பலத்தையும் குறைத்துவிடும்’’
என்று தி.மு.க.வினர் கோபம் காட்டுகிறார்கள்.
அதேநேரம் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே குமுறல் வெடித்துள்ளது.
அதாவது இதுவரை ஒற்றுமையாக இருக்கும் கட்சிக்குள் தி.மு.க. ஆதரவு அணி, எதிர்ப்பு அணி
என்ற பிரிவினையை ஆதவ் திட்டமிட்டு தூண்டிவருகிறார். இந்த விரிசல் பெரிதாகும்போது தேர்தல்
நேரத்தில் கட்சியை உடைப்பதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதற்காகவே தி.மு.க.வில்
இருந்து அனுப்பப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா இப்படி பேசிவருகிறார் என்றும் பேசப்படுகிறது.
இதற்கு வலு சேர்ப்பது போன்று, ‘தி.மு.க. கூட்டணியே நமக்கு முக்கியம் என்று ரவிக்குமார்
எம்.பி. இப்போது பதிவு போடத் தொடங்கியுள்ளார்…’’
வரும் 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக சீட்டுகள் வாங்கவேண்டும்
என்றால் இப்படி அதிரடியாகப் பேசினால் மட்டுமே சரியாக இருக்கும் என்று திருமாவளவனை மூளைச்சலவை
செய்து வைத்திருக்கிறாராம் ஆதவ். முதன்முறையாக விசிகவிலும் உட்கட்சி மோதல் சத்தம் கேட்கிறது.