Share via:
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரம் நிலையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கோவையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 5வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் கணக்கில் வராத ரூ.18 கோடி கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் காசா கிராண்ட் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் 4 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.