Share via:
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான திலீப் மகாதேவ் கவித் தங்கம் வென்றார். இவர் இலக்கை 49.48 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தார். திலீப் மகாதேவ் கவித் பெற்றது இந்தியாவின் 100வது பதக்கம் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி இந்தியா இதுவரை 26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முன்னேறி வருகிறது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா 72 பதக்கங்களை வென்றிருந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வாரி குவித்து வரும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் அவர் கூறும்போது, ‘வீரர்களின் திறமை, உழைப்பு மற்றும் மன உறுதியின் விளைவாக இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த போட்டிகளில் தடகளம், சதுரங்கம், படகு போட்டி உள்ளிட்டவற்றில் இந்தியா மேலும் பல பதக்கங்களை குவிக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.

