Share via:
மறைந்த தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா தனது 102வது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சங்கரய்யாவின் மறைவு செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சென்ற அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் சங்கரய்யாவின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தகைசால் தமிழர் சங்கரய்யாவின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.