Share via:

ராமர் கோயிலைக் கட்டி அதையே தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி
பயன்படுத்தியதை கடுமையாக விமர்சனம் செய்தார் ஸ்டாலின். இப்போது கோவை மருதமலையில்
160 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி
திராவிட சிந்தனையாளர்களை கொதிக்க வைத்திருக்கிறது.
கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்துசமய
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘’திமுக ஆட்சியில் இதுவரை
2,400 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முதல்கட்டமாக 7 முருகன் கோயில்கள் பெருந்திட்ட
வரைவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.400
கோடி மதிப்பிலும், பழநி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.99 கோடி மதிப்பிலும், திருத்தணி முருகன்
கோயிலில் ரூ.183 கோடி மதிப்பிலும், மருதமலை முருகன் கோயிலில் ரூ.6.50 கோடி மதிப்பிலும்,
திருவள்ளூர் சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.16 கோடி மதிப்பிலும் பெருந்திட்ட வரைவுப்
பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் ரூ.30 கோடி மதிப்பிலும், உதகையின்
காந்தல் பகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.16 கோடி மதிப்பிலும் பெருந்திட்ட
வரைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 7 திருக்கோயில்களில் மட்டும் ரூ.872 கோடி மதிப்பில்
பெருந்திட்ட வரைவுப் பணிகள் நடக்கின்றன. மருதமலை முருகன் கோயிலில் 2 அடுக்கு லிப்ட்
அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும். மருதமலையில்
160 அடி உயரத்தில் கல்லினால் ஆன முருகன் சிலை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான
ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆலோசனை நிறுவனத்தினர் மூலம் சாத்தியக்கூறுகள் ஆய்வு
இறுதி பெற்றவுடன் முதல்வர் அனுமதி பெற்று ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலை
இங்கு நிறுவும் பணிகள் தொடங்கப்படும்…’’ என்று அறிவித்தார்.
இந்த செய்திக்கு கொதிக்கும் திராவிட சிந்தனையாளர்கள், ‘’டெல்லியில்
செய்வது பாசிசம்னா நீங்க செய்வது பாயாசமா என்று நடிகர் விஜய் கேட்ட கேள்வி சரியாகத்தான்
இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை நிதியின் மூலம் பள்ளி, கல்லூரிகள் கட்டுவது,
பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதர வேண்டுமே தவிர, ஆசியாவிலேயே பெரிய முருகன்
சிலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கலைஞர் நாணயத்துக்கு பா.ஜ.க. தலைவர்களை அழைத்ததில்
இருந்தே மத்திய பா.ஜ.க. அரசுடன் இணைந்தே ஸ்டாலின் செயல்படுகிறார். சிலை அமைப்பதை மறுபரிசீலனை
செய்யவேண்டும். தான் ஒரு சங்கி இல்லை என்பதை ஸ்டாலின் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
முருகன் சிலை ஓட்டு வாங்கித் தரும் என்று நினைத்தால் தமிழகத்தில் தோல்வியே கிடைக்கும்’’
என்கிறார்கள்.
.