Share via:
புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாள்
கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி இன்று முதல் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி
பழனிசாமி, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து
மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 2026 சட்டமன்றப் பொதுத்
தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை
வெளியிட்டார்.
1. மகளிர்
நலன் : (குல விளக்குத் திட்டம்)
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின்
மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய்
2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின்
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும்,
மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் :
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து
பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில்
பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3. அனைவருக்கும்
வீடு : (அம்மா இல்லம் திட்டம்)
`அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு,
அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி `அம்மா இல்லம் திட்டம்’ மூலம்
விலையில்லாமல் வழங்கப்படும்.
அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய
மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு
கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
4. 100 நாட்கள்
வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் :
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும்
என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின்
வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர
வாகனம் வழங்கும் திட்டம் :
மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா
இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இபிஎஸ் பதிலளித்தார்.
கேள்வி : ஏற்கனவே திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார்கள்.
கடன் சுமை அதிகமாக இருக்கும்போது எப்படி சமாளிப்பீர்கள்?
இபிஎஸ் ; அவர்களுக்குத் திறமையில்லை, எங்களுக்கு இருந்தது. நாங்கள்
ஆட்சி செய்கிறபோது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் தான் கடன் இருந்தது. அரசுக்கு
வரி இல்லாத நேரத்தில் கூட கொரோனாவுக்கு 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். நாங்கள் திறமையாகக்
கையாண்டு நிதிச்சுமை குறைவாக உருவாக்கித் தந்திருக்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்றதும்
நிதி மேலாண்மை செய்ய நிபுணர் குழு அமைத்து கடன் குறைக்கப்படும் என்றனர், வருவாய் உயர்த்தப்படும்
என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக கடன் தான் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி
முடின்கின்ற தருவாயில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
கேள்வி : ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து திட்டம் போக்குவரத்து துறை மேலும் நெருக்கடிக்கு
உள்ளாக்காதா?
இபிஎஸ் : அதுதான் நான் சொல்கிறேன் நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாவற்றையும்
சமாளிக்கலாம். நிர்வாகத் திறமையற்ற அரசு இருக்கின்றபோது தான் நிதிச்சுமை அதிகரிக்கிறது.
கேள்வி : தாலிக்கு தங்கம் திட்டம் தொடருமா?
இபிஎஸ் : அதாவது, இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடுகின்றபோது
இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். எங்களுடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
ஒவ்வொரு மண்டலமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள், மக்களிடம் மனு வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் கோவை மண்டலத்துக்குச் செல்லவில்லை. அங்குசென்று கருத்துகளை விண்ணப்பமாகப் பெற்று,
அதையெல்லாம் சேகரிக்கப்பட்டு, அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மக்கள் என்னென்ன
நினைக்கிறார்களோ அவையெல்லாம் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

