அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இணையாக அவரது மகன் இன்பநிதிக்கும் மரியாதை கொடுத்து, புதிய அரசியல் அரங்கேற்றத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காணவந்த உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைச்சர் மூர்த்தி, அவருக்குப் போலவே இன்பநிதிக்கும் பொன்னாடை அணிவித்து மேடையில் முன் இருக்கையில் அமரவைத்தார். இன்பநிதி அமர்ந்த பிறகே அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆர். உள்ளிட்ட அமைச்சர்களும் அமர்ந்தனர். ஏதேனும் காரணத்தால் இன்பநிதி எழுந்தால், அத்தனை பேரும் எழுந்து நின்ற காட்சியைக் கண்டு அத்தனை பேரும் அதிர்ந்து நின்றார்கள். அமைச்சரின் தகுதி என்ன என்பது கூட தெரியாமல் மூர்த்தி நடந்துகொண்டதாக அவரது கட்சியினரே வேதனைப்படுகிறார்கள்.

இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மீது தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அமைச்சர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பாலமேடு கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பாலமேட்டில் அனைத்து சமுதாய உறவின் முறைக்கு சொந்தமான கோயில்களில் காளைகளை மேற்படி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வது கிராம பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு தொடங்கிய பின் பாலமேடு கிராம கமிட்டி சார்பாக ஏழு கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் பல வருடங்களாக பாலமேடு பறையர் சமூகத்தை சேர்ந்த பாறை கருப்பசாமி கோவில் காளையை சாதிய தீண்டாமை காரணமாக அவிழ்த்து விடப்படுவதில்லை.  மஞ்சமலை ஆற்றில் நடைபெறும் பொதுவிழாவில் கலந்து கொள்ளவும், ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளவும் பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தடை விதித்துள்ளது. 

இது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் தங்கள் பறையர் சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் தங்கள் பறையர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

சமூகநீதி நல்லாயிருக்கு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link