Share via:
சென்னை பகுதியில்
புயல், வெள்ளப் பாதிப்புகள் என்றால் முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் ஒவ்வொரு ஏரியாவாக
சுற்றிப் பார்த்து துணை நிற்பார்கள். இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
புயல் பாதிப்பிற்கு இன்று தான் முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். ஆனால், நேற்றைய தினமே
நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டார்.
இன்று முதல்வர் ஸ்டாலின்
விடுத்துள்ள அறிக்கையில், ‘’புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு,
மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன்.
கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை
தொடர்புகொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின்
நிலவரத்தை எ.வவேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சு. முத்துசாமி
அவர்களையும், தருமபுரி மாவட்டத்துக்கு சேலம் ராஜேந்திரன் அவர்களையும் நியமித்து மீட்பு
நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்…’’ என்று கூறியிருக்கிறார். இன்று
பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார்.
ஆனால் நேற்றே எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை நேரில்
பார்வையிட்டேன். திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாலம்
உடைந்து, திமுக ஆட்சியால் மூன்றாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏரியின் உபரி
நீர் நகரத்துக்குள் வெள்ளமாக செல்கிறது. சிறப்பான ஆட்சி நடத்துவதாக சொல்லும் ஸ்டாலின்இங்கு
வந்து பார்த்தால் இந்த ஆட்சியின் அவல நிலை தெரியும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் அவர்,
‘’திருவண்ணாமலை தீபமலை
அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற
நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள்
சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும்
வேதனையையும் தருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு
18 மணி நேரம் ஆகியும் மண்ணில்
புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று
செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர்
மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு
இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக
செயல்பட வேண்டும் ’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புயல் நிவாரணப்
பணிகளில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு செயலாற்றுவது அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.