News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

திமுகவின் தோல்விகளை ஆராய்ந்த குழுவின் அறிக்கையில் துர்கா ஸ்டாலின், இன்பநிதி ஆகியோரின் அணுகுமுறை குறித்து எதுவும் இடம்பெறாத விவகாரம் திமுகவுக்குள் கொந்தளிப்பு உருவாக்கியுள்ளது.

தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழு, ‘’இளைஞர்களின் சக்தியை திமுக முழுமையாக பயன்படுத்தவில்லை. உரிமை தொகை கிடைக்காத மகளிரிடம் அவநம்பிக்கை. மகளிரிடையே விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை கண்டுகொள்ளவில்லை. குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்கள் முட்டுக்கட்டை. கட்சி பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை” என்பது போன்ற அனைவருக்கும் தெரிந்த சங்கதிகளை மட்டுமே கூறியிருக்கிறது.

மேலும், அதிகாரிகளின் ஆட்சியால் தோல்வி என்பது முக்கிய இடம் பிடித்திருக்கிறது. இதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதாவது, ஆட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்குக் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளுமே பாலமாக இருக்க வேண்டும். ஆனால், கட்சிப் பொறுப்புகளில் இல்லாத, ஆனால் பல தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளும், மக்களின் நியாயமான தேவைகளும் அதிகார வர்க்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மக்களாட்சியில் அதிகாரிகளின் கைகள் ஓங்கும்போது, அது மக்களின் அதிருப்தியையே சம்பாதிக்கும். திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மூத்த அமைச்சர்களும் தங்களை தேர்ந்தெடுத்த மக்களை விட்டு மிகவும் விலகிச் சென்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.

அடிமட்டத் தொண்டர்களின் வியர்வையிலும், மக்களின் நம்பிக்கையிலும்தான் எந்தவொரு ஆட்சியும் அமைகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் அதிகாரத்தை அதிகாரிகளிடமும், ஒரு சில தனிநபர்களிடமும் ஒப்படைத்துவிட்டு, அடித்தளமாக இருந்த தொண்டர்களையும் மக்களையும் மறந்துவிட்டால், அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள்.

அதோடு கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் திமுக நிர்வாகிகள் அதிருப்தி. விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து கூறினால் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர் என்பது ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜகவை கடுமையாக எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கும்போது, துர்கா ஸ்டாலின் ஒவ்வொரு கோயிலாக சென்றுவருவதும், இன்பநிதியை இப்போதே பொதுவெளிக்கு கொண்டுவந்ததும் பெரும் அதிருப்தி என்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சபரீசன் ஊடகங்களில் வெளிப்படையாக வந்து வாக்கு சேகரித்தது பெரும் சிக்கலை உருவாக்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

சமூக ஊடகங்களின் எதிர் குரல் கொடுப்பவர்களை பென் நிறுவனத்தை வைத்து வாயடைத்தல், பெண்கள் எதிரான குற்றங்கள், போதை பிரச்சனைகள் எழுப்பியபோது, சரியான கடும் நடவடிக்கை எடுக்காமல், அசட்டை காட்டியது, மக்கள் பிரச்சனைகளை பேசாமல், மாநில தேர்தலில் பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, டீலிமிடேஷன் போன்றவற்றை பேசியது எடுபடவில்லை. என்கிறார்கள்.

இதையெல்லாம் ஸ்டாலின் கவனித்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல் சபரீசன் கையில் ஒப்படைப்பாரா என்பதுதான் கேள்வி.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link