Share via:
திருவண்ணாமலை திமுக வழங்கிய வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாகக்
‘கால் மேல் கால்’ போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் கடும் எரிச்சலைக்
கிளப்பியிருக்கிறது.
திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் திமுக
வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி
உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள்
கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கப்பட்டது.
அதில் கால் மேல் கால் போட்டு கெத்தாக் போஸ் கொடுத்து அசத்தினார் ஸ்டாலின்.
இப்போது ஒரு கிலோ வெள்ளி சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சேர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையில் செய்யப்பட்டது என்கிறார்கள். அப்படியென்றால்
இதன் விலை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய். ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டால் மக்கள் எரிச்சல்
அடைவார்கள், ஓட்டு போட மாட்டார்கள் என்பதை ஸ்டாலினுக்குச் சொல்லுங்கள் என்று திமுகவினரே
புலம்புகிறார்கள்.
அதேநேரம், தங்கத்தில் செய்யவில்லையே என்று சந்தோஷப்படுங்கள். முதலில்
அப்படித்தான் திட்டமிடப்பட்டது என்கிறார்.
வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்த குஷியில் இங்கு பேசிய ஸ்டாலின்,
‘’அமித்ஷா அவர்களே, நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும்,
உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு! இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே
புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே… அன்புடன் வந்தால், அரவணைப்போம்…
ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை
ஜெயித்துக் காண்பிப்போம்! மீண்டும் சொல்கிறேன். அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன்
வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்…’’
என்றார்.
அதேபோல் உதயநிதி, ‘இன்று சிலபேர் மிரட்டி பார்க்கிறார்கள். குறிப்பாக
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் பேசுகிறார். நமக்கெல்லாம் சவால் விடுகிறார். பீகாரில்
வெற்றிபெற்றுவிட்டோம். எங்கள் இலக்கு அடுத்தது தமிழ்நாடு என்கிறார். நான் அமித்ஷாவுக்கும்,
அவருடன் இருப்பவர்களுக்கும் சொல்கிறேன். எங்களை எவ்வளவு சீண்டினாலும் எங்கள் கருப்பு,
சிவப்பு இளைஞர் படையினர் உங்களை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். நமது முதல்வர்
சொன்னதுபோன்று நமது தமிழகம் டெல்லிக்கு எப்போதுமே அவுட்ஆப் கன்ட்ரோல்தான்…’’ என்று
எச்சரிக்கை செய்திருக்கிறார்.