Share via:
ஈரோடு கூட்டத்தை முடித்த கையோடு த.வெ.க வின் அடுத்த பிரமாண்ட பொதுக்கூட்டம்
ஜனவரி 2026 முதல் வாரம் சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் கோட்டை
என்பதால், செங்கோட்டையன் இங்கு திட்டமிட்டு அடுத்த கூட்டம் நடத்துகிறார் என்று குற்றச்சாட்டு
வைக்கிறார்கள். இதையடுத்து விஜய் மீது அதிமுகவும் பாயத் தொடங்கிவிட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும்
தனி அடையாளமும் கொள்கை தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படை இல்லாதவர்கள்
தற்போது அரசியல் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் என்ற முகமூடியை அணிந்தால்தான்
மக்களைச் சந்திக்க முடியும், வாக்குகளைப் பெற முடியும் என நினைப்பது அவர்களிடம் தனிச்சிறப்பு
இல்லை என்பதையே காட்டுகிறது.
ஊர்க் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும் பருந்தாகாது. களத்தில்
நிலைபெறாதவர்கள், ஆலமரமாக வளர்ந்த அதிமுக இயக்கத்தைப் பற்றிப் பேசக்கூடாது. என்னதான்
எம்ஜிஆரைப் பற்றிப் பேசினாலும், அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது!”
என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் செம்மலை, ‘’தமிழக வெற்றிக் கழகம்
கட்சி ஆரம்பித்தபோது கொள்கை தலைவர்கள் என ஐந்து பேரை அறிவித்துவிட்டு இன்று அவர்களை
அம்போ என்று விட்டுவிட்டு இன்று அதிமுக கட்சி நிறுவனர்களான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை தன் கட்சிக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக நடிகர்
விஜய் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையை ஏற்று அதிமுக
கட்சியில் இணைந்து கொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகம் தங்கள் கொள்கை தலைவர்களை விட்டுவிட்டு அடுத்த
கட்சி நிறுவனர்களை வாக்கரசியலுக்காக பயன்படுத்துவது என்பதும் திருட்டு தான் என தமிழக
வெற்றிக் கழக தலைவர்கள் உணர வேண்டும் காரணம் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக திமுக கட்சியிலிருந்து
பிரிந்த கட்சியும் இல்லை அந்த கட்சியின் கொள்கை தலைவர்களில் பேரறிஞர் அண்ணாவோ,புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர் என யாரும் இல்லை.’’ என்று கடுப்பாகியுள்ளார்.
விஜய்யுடன் அதிமுக கூட்டணி உறுதியாகும் என்று பலரும் எதிர்பார்க்கும்
சூழலில் இப்படி ஒரு வில்லங்கம் ஏற்பட்டிருப்பது இரண்டு கட்சித் தொண்டர்களிடமும் கொஞ்சம்
சலசலப்பை உருவாக்கியுள்ளது. தீயசக்தி திமுகவை அழிப்போம் என்று எப்படியும் அதிமுக கூட்டணிக்கு
வந்துவிடுவார் என்பதே இப்போதும் அவர் கட்சியினர் எதிர்பார்ப்பாக உள்ளது.