Share via:
சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்து வெளியிட்ட புகைப்படம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் தொடர்பான வழக்கில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யக் கோரி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ராஜமுந்திரி சிறையை தாண்டி தனது காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரை நிறுத்தியுள்ளார். பின்னர் ராஜமுந்திரி சிறை முன்பாக ஒரு செல்பியை எடுத்து அதற்கு, ‘‘நான் வெளியே… அவர் (சந்திரபாபு நாயுடு) உள்ளே’’ என்று கேப்ஷன் போட்டு பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த தெலுங்கு தேசம் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். சிறை வாயில் முன்பாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், சாலையில் நின்றபடி இயக்குனர் ராம்கோபால் வர்மா செல்பி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விவகாரத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இந்த செயலைத் தொடர்ந்து ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.