Share via:
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவை அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மாரிமுத்து (57) டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், காலை திடீர் மாரமடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.
மறைந்த நடிகர் மாரிமுத்து தனது 20 வருட திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தும், 2 திரைப்படங்களை இயக்கியும் தனது திறமையால் ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தார்.
அதிலும் குறிப்பாக சன்டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ‘ஏம்மா ஏய்’ என்ற இவரது டயலாக் ரசிகர்களால் மிகவும் ரசித்து பார்க்கப்பட்டது.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக 2008ம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும், 2014ம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 திரைப்படங்களை இயக்கினார். இந்த 2 படங்களும் வெற்றி பெறாத நிலையில் மாரிமுத்து நடிகராக அவதாரம் எடுத்தார்.
யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, பரியேறும் பெருமாள், உதயா உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் மாரிமுத்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு நடிகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியன் 2 திரைப்படத்தில் மாரிமுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த இயக்குனர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரையுலகினர் திரளாக தங்கள் இரங்கலை கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.

