Share via:
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யுவில் இன்றும், நாளையும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் அதை காண கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரில் மொத்தம் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலகக்கோப்பை தற்போது பல்வேறு நாடுகளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
அந்த வகையில் அந்த உலகக்கோப்பை இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அரங்கில் உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உலகக்கோப்பையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த பதிவில், ‘உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்’ என்ற கேப்ஷனை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
உலகக் கோப்பை இன்றும், நாளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கோப்பையை பார்த்து மகிழ்வதற்காக எக்ஸ்பிரஸ் அவென்யுவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் மால்களில் நேரத்தை கடத்தும் மக்களுக்கு உலகக்கோப்பையை காண்பது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னையை தொடர்ந்து உலகக்கோப்பை பெங்களூர் கொண்டு செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
********