Share via:
தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். பலர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் தென் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, அங்குள்ள அரசு உயர் அதிகாரிகளிடமும், தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் தொடர்ச்சியாக மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கனிமொழி எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.