Share via:
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ம் தேதி அதிகாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் முன்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் திரளாக திரண்டதால் கடந்த சில நாட்களாகவே ஆந்திர மாநிலம் போர்க்களமாக மாறியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து போனது. இதனை சரி செய்ய ஆந்திராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அச்சுறுத்தல் எழுந்த நிலையில், தனியாக உள்ள ‘சினேகா’ என்ற பிளாக்கில் தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு ‘7691’ என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ள அவருக்கு ஒரு தனி உதவியாளரும், 5 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜமுந்திரி சிறையை சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டில் இருந்து உணவும், மருந்தகளும் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி காலையில் பால் கலக்காத காபி, பழ சாலட், வெந்நீர் ஆகியவை அளிக்கப்பட்டது.
ஆந்திராவில் முக்கியக் கட்சியாக திகழ்ந்து வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருக்கு கைதி எண், பலத்த போலீஸ் பாதுகாப்பு, வீட்டு உணவு உள்ளிட்டவை சகலமும் நடந்து வந்தாலும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.