Share via:

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரன் தமிழரசனை சாதி ரீதியாக
ஒடுக்கப்பட்டதற்கும், இதற்கு பின்னணியில் அமைச்சர் மூர்த்தி இருப்பதற்கும் எதிர்ப்பு
தெரிவித்து ஒட்டுமொத்த கிராமமும் கறுப்புக்கொடி கட்டி போராடினார்கள். இதற்கு ஸ்டாலின்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கண்டனம்
தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ், ‘ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை
அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்
சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியதில் இருவர் உடல் முழுவதும்
தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை
கைது செய்யாமல், பாதுகாக்க காவல்துறை முயன்று வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது…’’
என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘’நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த
தமிழரசன், சங்கர், விஜயகணபதி உள்ளிட்ட நால்வர் கடந்த 16&ஆம் தேதி திருமால்பூரில்
உள்ள விளையாட்டுத் திடலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பாமகவை
சேர்ந்தவர்கள். அப்போது அங்கு வந்த திருமால்பூரைச் சேர்ந்த பிரேம், மணிகண்டன், கோபி,
வெங்கடேசன், கீழ்வெண்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், தசரதன் ஆகிய விடுதலை சிறுத்தைகள்
கட்சியைச் சேர்ந்த 6 பேரும் அங்கு சென்று பா.ம.கவினரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்து ஓட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பெட்ரோலை ஊற்றி அனைவரையும்
எரிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
அதன் பின் அங்கிருந்து சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,
சிறிது நேரத்தில் திரும்பி வந்து, பாமகவினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகள் தமிழரசன், விஜயகணபதி ஆகிய இருவர் மீது விழுந்து
அவர்கள் உடல் முழுவதும் பெட்ரோல் பரவியது. அதனால், உயிருக்கு பயந்து அவர்கள் தப்பி
ஓடிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் அவர்களை சுற்றி வளைத்து
தீ வைத்துள்ளனர்.
அதனால் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாதி அடிப்படையில் வன்முறையில்
ஈடுபடுவதும், தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்
நெல்வாய் கிராமத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த மக்களின் சொத்துகளை சூறையாடினர்.
அதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை
கட்டுக்குள் வந்தது. சில ஆண்டுகள் கட்டுக்குள் இருந்த அவர்களின் அட்டகாசம் இப்போது
மீண்டும் தலைதூக்கியிருக்கிறது… இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் சாதிவெறி சக்திகளைக்
கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’ என்று
கேட்டுள்ளார்.
இதற்கு திருமாவளவன், ‘’ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள
நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.
பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட
முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப
வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக
மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான சாதி வெறியர்களால்
கழுத்தறுத்து படுகொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர்
மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார்.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில்,
காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை
கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது, இது தமிழ்நாடு முழுவதும்
பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை விடுதலை சிறுத்தைகள், கம்யுனிஸ்ட் கட்சியினர்
முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கையில்
இறங்க வேண்டிய நேரம் இது.